| ரோட்டோரம் மனிதர்களின் கூட்டம். நீண்ட நெடுக்க கடைகள். நிற்க நேரமில்லாமல் ஓடும் மக்கள். என்னவென்று சொல்ல?! சாலையோரங்களில் பணம் கேட்டு கையேந்தி வரும் கைவிடப்பட்ட முதியோர்கள். கல்வி கற்க வேண்டிய சிறார்கள் எதையேனும் ஏந்தி விற்கும் நிலை. நீண்ட நெடுக்க உள்ள கடைகளில் ஏதேனும் வாங்குவோம் என்று எண்ணி நடைப்பயணம் செய்தேன். கண்ணில் பல தென்பட்டும் உணர மறுப்பவர்கள் நாம். மறுக்கிறோமா இல்லை உணர மறக்கிறோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. ஏனோ ஒரு விசை. ஒரு நிமிடம் உலகத்தை, உலகத்தின் மக்களை வியந்து பார்த்தபடி ஒன்றன் கடையின் அருகில் நின்றேன். அந்நேரம் முகம் தெரியாத நபர் ஒருவர் என்னை கடந்து சென்றார். சில சமயங்களில் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட நமக்குள் ஒரு வித ஆனந்தத்தையும் புதுவித புத்துணர்ச்சியையும் உருவாக்கும். அதுதானே வாழ்க்கையின் சுவாரசியமே! அதை அன்றே நான் உணர்ந்தேன். கருப்பு சட்டை ,நீல நிற ஜீன்ஸ் பேண்ட். என்ன நினைக்கிறீர்கள்? இக்காலத்தின் இளைய தலைமுறை அவன்.அதிகபட்சம் 25 வயது இருக்கும். ஏதோ வேலை நிமித்தமாக முன்னோக்கி சென்று கொண்டிருந்தான். திடீரென ஒரு வயதான பாட்டி என் கண்களுக்கு தென்பட்டார். அந்த பாட்டியையும் கடந்து சென்ற அவன் , திடீரென வந்த திசையை நோக்கி கண்களை திருப்பினான். ஓர் தளர்ந்த குரல். அந்தக் குரல் மக்கள் நிறைந்த, சப்தம் நிறைந்த சாலையில் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை . ஆனால் அவனோ திரும்பினான் . வந்த வழியே அந்த முதியவரை நோக்கி நடந்தான். தன் உயரத்தை இன்னும் குறைத்து சாய்ந்து நின்றான் அந்த பாட்டியை நோக்கி. தள்ளாடும் கைகளுடன் அந்த இளங்கைகளை இறுக்கபிடித்து தடுமாறாமல் தன்னை நிதானப்படுத்திக் கொண்டது அப்பாட்டியின் கைகள் . ஏதோ அந்த பாட்டி அந்த முகம் தெரியாத நபரிடம் கேட்க அதற்கு அவனும் மெல்ல தலையசைத்தான். உலகின் விசையே அவர்கள் இருவரை மையமாகக்கொண்டு சுழல்வதைப் போல் எண்ணி, இவை அனைத்தும் கவனித்தபடியே ஒரு ஓரமாய் மற்ற மனிதர்களிடமிருந்து விடுபட்டு நின்றேன். அவ்விருவரும் சாலையின் எதிர் திசையை நோக்கி நின்றனர். பாட்டியின் கைகள் அந்த இளைஞனின் கைகளை இறுக்க பிடித்து இருந்தது .சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேகத்தை பார்த்தால் மனம் பதறும் . அந்த இளைஞன் கையசைத்தான். வாகனங்கள் சற்றே பொறுமையாய் வந்தது. அந்த முதியவரின் வேகத்திற்கு இணங்க தன் வேகத்தை குறைத்தபடி, சாலைகளில் வரும் வண்டிகளிடம் கையசைத்தபடி நடந்தான் . தடுமாறும் கால்கள் அவன் கைகளை இறுக பிடித்து இருந்ததால் கொஞ்சம் தெளிவாகவே அடியெடுத்து வைத்தன. மறுபுறம் இருவரும் அடைந்தனர். உதவிய பின்பு தன் வேலையை மேற்கொள்ள திரும்பிய இளைஞனை சற்றே இழுத்து நிறுத்தினார் அந்த பாட்டி. நானும் உற்று நோக்கியபடியே நின்றேன். எதைக் கண்டு நான் வியந்து நிற்கிறேன் என்பதை கூட அறிய விரும்பாத மழலை போல், கண்ணசைக்காமல் பேச்சற்று நின்றேன். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் அளவு கூட நான் அருகில் இல்லை. ஏதோ வினோத வேடிக்கை காட்சியை காண்பதை போல் நோக்கிக் கொண்டிருந்தேன் அவ்விருவரை. அந்நபர் திடீரென தன் பின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து அந்த பாட்டியிடம் தந்தார் .அந்த பாட்டியும் மனமகிழ்ந்து வாழ்த்தினார் . எனக்கோ ஓர் ஆச்சரியம். இக்காட்சிகள் எல்லாம் எதார்த்தமான வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். ஓராயிரம் கேள்விகள் என் மனதினுள் உதித்தது. தினம்தோறும் கையேந்தி நிற்கும் இவர்களுக்கு ஒருநாள் கொடுக்கும் பணம் தான் நிரந்தர தீர்வா?!! தினம்தோறும் பணத்திற்காக கையேந்தும் இவர்களுக்கு பணம் தருவதை தவிர்த்து இவர்களுக்கு வேறு ஏதேனும் நிரந்தரமாய் செய்ய நாம் என்றேனும் சிந்தித்ததுண்டா? இதற்கு விடை தெரியாமல் மூச்சடைத்து நின்றேன். இதை யோசித்தபடியே நின்ற நான் , அந்நபர் பணத்தை கொடுத்துவிட்டு , பணி நோக்கி நடப்பதைக் கண்டேன். ஓரிடத்தில் நின்றபடி , அந்நபர் என் கண்களுக்கு எட்டா தூரம் செல்லும்வரை கண்கள் விரித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏதோ புரியாத உணர்வு .ஒரு புத்துணர்ச்சி. ஒரு விதமான கேள்விகள் நிறைந்த மனநிலை. என் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்காதா என்று சோர்ந்து தேடி நின்ற கண்கள். இதே போன்ற சம்பவங்களை அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். இவை என்றும் எனக்கு பெரிதாக தெரிந்ததில்லை .இன்று மட்டும் ஏன் அந்த மனிதனின் தயாள குணத்தையும் மனிதத்தையும் கண்டுவியந்தேன் ?? தினமும் காணும் செயல்களில் நாம் உள்ள அழகை ,அமைதியைக் காண மறுத்து விடுகிறோம் என்று என் மனம் குமுறுவது உணர்ந்தேன் .ஏதோ ஒரு வெறுமை. ஒரு பெருமூச்சு விட்டேன். ஒரு புன்சிரிப்பும் கூட. மனிதத்துவத்தை காணும் போதெல்லாம் ஓர் அலாதி புன்சிரிப்பு . இந்நாள் அனைத்தும் இவற்றை உணர மறந்ததை நினைத்து வருந்தினேன். பின் உயிரில்லா என் வாழ்க்கையை நோக்கி நகர்ந்தேன். |